ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும்படியான ஒரு நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மயிலாடுதுறையில் கைது செய்துள்ளனர். இவர் 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சில இந்து இயக்கங்களின் அமைப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே ஆஷிக் என்ற அந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் 2018-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டதாகவும் கோயம்புத்தூரில் சிலரைக் கொல்ல சதி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய புலனாய்வு முகமை அளித்த தகவல்களின் படி ஏழு பேர் கொண்ட குழு ஒன்று கோவையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக வேலை பார்க்க உறுதி எடுத்துக் கொண்டு கோவையில் இருந்த சில தலைவர்களைக் கொலல செய்து மத நல்லிணக்கம், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை குலைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆஷிக் முக்கிய குற்றவாளியாவார்.
2018-ஆம் ஆண்டு இந்த ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஆஷிக் பெயிலில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகததால் அவர் மீது பிணை இல்லா வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெயில் கிடைத்த பின் மயிலாடுதுறை வந்த ஆஷிக் நீடூரில் உள்ள ஒரு பிராய்லர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மயிலாடுதுறை காவல் துறையினரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஷிக்கை கண்டுபிடிக்க உதவி கோரிய நிலையில் நேற்று ஆஷிக் வேலை செய்து வந்த பிராய்லர் கடையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
Source: TNIE