பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை தாருங்கள் : பா.ஜ.க எம்.எல்.ஏ M.R.காந்தி..!

Update: 2021-06-04 06:35 GMT

கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.





கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ எம்.ஆர்.காந்தியும் இதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது கோரிக்கையில் கொரோனா இரண்டாவது அலையின் போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்கள், மண்பாண்டம் செய்வோர், தெருவோர வியாபாரிகள், ஒலி-ஒளி அமைப்போர், நாட்டுப்புற கலைஞர்கள், சிறு கடை வணிகர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும் எந்த வருமானமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி மற்றும் பால் போன்ற பொருள்கள் வியாபாரம் செய்பவர்களைத் தவிர அனைத்து வியாபாரிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், முடிதிருத்தும் கடை வைத்திருப்பவர்கள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

அதே போல் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாலும் கோவில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டு உள்ளதாலும் அவற்றை நம்பி இருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள், மேளதாளம் இசைப்போர் ஆகியோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே ஆட்டோ ஓட்டுனர்கள், முடி திருத்துவோர், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கோரிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மண்டைக்காடு கோவில் தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிலில் ஆகம விதிப்படி பரிகார பூஜைகள் செய்து தெய்வ பிரசன்னம் பார்த்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது கோரிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் இதுபோன்ற விபத்துக்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இந்து அறநிலையத்துறை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News