ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள்.. தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் ஊடுருவல்..

Update: 2024-03-06 14:11 GMT

மண்டபம் அருகே ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன் 4 பேரைக் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப் பகுதியில் வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.




இந்தத் தேடுதல் வேட்டையின் போது, இன்று அதிகாலை இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு நாட்டுப்படகை அதிகாரிகள் கண்டனர். படகை இடைமறித்து அதிகாரிகள் சோதனையிட்டதில், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 சாக்குகளை கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட படகையும், அதிலிருந்த மூன்று பேரையும் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துவந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, போதைப் பொருள் கடத்தியதை அந்த நபர்கள் ஒப்புக்கொண்டனர். பாம்பனைச் சேர்ந்த ஒருவர், தங்களிடம் இந்தப் போதைப் பொருளைக் கொடுத்து, நடுக்கடலில் வரும் இலங்கை நபர்களிடம் ஒப்படைத்து விடுமாறு கூறியதாகவும், அதன்படி போதைப் பொருளை எடுத்துச் சென்றதாகவும், பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.




பிடிபட்டவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், போதைப் பொருளை ஒப்படைத்த நபரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்துவதில் அவர் முக்கிய நபராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. கடல் வழியாக போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திச் சென்றதாக அவர் கூறினார். பிடிபட்ட போதைப் பொருள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட சாக்குகளில் இருந்து 99 கிலோ எடை கொண்ட 111 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதில் ஹாஷிஷ் என்கிற போதைப் பொருள் என்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.108 கோடியாகும். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News