ஒரே ஊரில் 108 சிவாலயங்கள் - தமிழகத்தில் ஓர் அதிசய கிராமம்!

ஒரே ஊரில் 108 சிவாலயங்கள் - தமிழகத்தில் ஓர் அதிசய கிராமம்!

Update: 2021-01-17 13:28 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொப்பூர் என்ற கிராமம் 108 சிவாலயங்களை கொண்ட அதிசய கிராமமாக திகழ்ந்து வருகிறது. இந்த பகுதியை ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கொப்பூர் 250 ஆண்டுகளுக்கு முன் திருக்காப்பூர் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் இதன் பெயர் கொப்பூர் என்று மருவியது. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதரிப்பதற்கு முன்னர் இங்கு சைவ சமயத்தினரே அதிகமானோர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வேறா எங்கும் இலாலாத வகையில் இந்த ஒரே ஊரில் 108 சிவாலயங்கள் உள்ளன. ஒவ்வொரு சிவாலயத்திற்கு அருகிலும் ஒரு கோவில் குளம் உள்ளது. அந்தக் கோவில் குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதரித்த பின்னர் இங்கு சைவ சமயத்தவர்கள் பலர் வைணவத்தின் பால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இங்குள்ள 108 சிவாலயங்களில் பல்வேறு சிவாலயங்கள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து போய்விட்டதாகத் தெரிகிறது. பொதுவாக ஆன்மீக அன்பர்கள் 108 சிவாலயங்களை ஊர் ஊராக தேடிச்செல்வது வழக்கம். ஆனால் இங்கே ஒரே ஊரில் 108 சிவாலயங்களும் இருப்பது இந்த ஊரின் சிறப்பம்சமாக உள்ளது. 

108 சிவாலயங்கள் இருந்த ஊரில் தற்போது 10 சிவாலயங்கள் மட்டுமே உள்ளன என்றும் மற்ற அனைத்து சிவாலயங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி விட்டதாகவும் கோவிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களும் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் மீதம் உள்ள கோவில்களும் குளங்களும் கூட புதர் மண்டிப் போய் கோவில் இருந்த இடமே தெரியாமல் இருப்பதாகவும் கிராமத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பகுதியில் காணாமல் போன சிவாலயங்களை கண்டுபிடித்து, மீட்டு, புனரமைத்து மீண்டும் வழிபாடு நடக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் இப்பகுதியை ஆன்மீக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

கோவில்களை மீட்டால் 108 கோவில் குளங்களால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும் எவ்வாறு ஒரே ஊரில் இத்தனை சிவாலயங்கள் கட்டப்பட்டன, இதன் பின்னணி என்ன, கட்டியது யார் உள்ளிட்ட தகவல்களையும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இப்படியொரு வரலாற்று பொக்கிஷம் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News