மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி, 200 பேர் படுகாயம்- பிரதமர் மோடி இரங்கல்!
மத்திய பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினார். 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்தியபிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பற்றியது. இதனால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் எடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததாகவும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் அதன் அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மலமலவென கொழுந்து விட்டு எரிந்த தீ தொழிற்சாலையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியது.
இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் வானுயரத்துக்கு தீப்பிழம்பும் கரும்புகை மண்டலமும் எழுந்த காட்சிகளும் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவிப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் , பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்களும் அங்கு குவிந்தன.
கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். அவர்களின் உதவிக்காக அண்டை மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதே வேலையில் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பிற மீட்பு குழுக்கள் முழு வீச்சில் ஈடுபட்டன. இதனிடையே தீயின் கோரப்பிடியில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.