14 ஆயிரம் கோடியில் விவசாய திட்டங்கள் - மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

விவசாயிகளின் வருவாயை பெருக்க ரூபாய் 14,000 கோடி செலவில் ஏழு முக்கிய திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

Update: 2024-09-05 14:32 GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதன் வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளில் முழுமையான மேம்பாட்டுக்காக ஏழு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

ஏழு முக்கிய திட்டங்களுக்கும் சுமார் 14000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களின் வருவாயை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆராய்ச்சி மற்றும் கல்வி, பருவநிலையை எதிர்கொள்ளுதல் ,இயற்கை வள மேலாண்மை, வேளாண் துறையை டிஜிட்டல் மயமாக்கல் ,தோட்டக்கலை துறை, கால்நடைகள் துறை வளர்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.ஏழு திட்டங்களில் ஒன்றாக 2,817 கோடி செலவில் டிஜிட்டல் வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

அத்திட்டத்தில் வேளாண் ஆவணங்கள், வரைபடங்கள், பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவை டிஜிட்டல்மயமாக்கப்பட்டு பராமரிக்கப்படும். அவற்றை சேமித்து வைக்க ஒருங்கிணைந்த தரவுத்தளமாக 'அக்ரி ஸ்டாக் ' அமைக்கப்படும். மற்றொரு முக்கிய அம்சமாக விவசாயிகள் ஆதரவு அமைப்பு செயல்படும். ரூபாய் 3,979 கோடி செலவில் உணவு மற்றும் ஊட்டத்திற்கு பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஏழு திட்டங்களில் அடங்கும். பருவநிலையை சமாளித்து பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். வேளாண் கல்வியை வலுப்படுத்த ரூபாய் இரண்டாயிரத்தி 291 கோடி செலவில் ஆன மற்றொரு திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் கீழ் இது செயல்படும் .புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனப்படுத்துவதே இதன் நோக்கம். நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் .கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் அவற்றின் உற்பத்திக்கான ரூபாய் 1,702 கோடி திட்டமும் உள்ளது .தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் ,கிருஷி விஞ்ஞான் கேந்திரா , இயற்கை வேளாண்மை ஆகியவை ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும்.

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் மும்பை - இந்தூர் ரெயில் பாதைத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .இதன் தூரம் 39 கிலோமீட்டர் ஆகும் .திட்டச் செலவு ரூபாய் 18 ஆயிரத்து 36 கோடி . 2028 - 2029 நிதியாண்டுக்குள் இத்திட்டம் நிறைவடையும். மராட்டியம் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆறு மாவட்டங்களின் வழியாக இந்த ரயில் பாதை செல்லும். அந்த பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி அடையும். முப்பது புதிய ரயில் நிலையங்கள் கட்டப்படும். சுமார் 1000 கிராமங்களுக்கு ரயில் வசதி கிடைக்கும். மதிய மந்திரி சபை கூட்டத்தில் குஜராத் மாநிலம் சனாந்த் என்ற இடத்தில் கேனஸ் செமிகான் நிறுவனம் செமி கண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூபாய் 3,300 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சிப்புகள் உற்பத்தி செய்யும் அளவுக்கு இதன் திறன் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News