150 ஆண்டுகள் பழமையான சட்டங்கள்.. முதல் முறையாக மாற்றங்கள் செய்த மோடி அரசு..
கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறையை நிர்வகிக்கும் மூன்று சட்டங்களில் முதல் முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, மக்களவையில் இந்திய குற்றவியல் சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார சட்ட மசோதா, 2023 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். விவாதத்திற்குப் பிறகு அவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், முதல் முறையாக, இந்தியத்தன்மை, இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய மக்கள் தொடர்பான கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறையை நிர்வகிக்கும் மூன்று சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1860 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல, தண்டனை வழங்குவது என்று அவர் கூறினார். இப்போது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (ஐபிசி) மாற்றாக இருக்கும் என்றும், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (சிஆர்பிசி) பதிலாக இருக்கும் என்றும், பாரதிய சாக்ஷய மசோதா இந்திய ஆதாரச் சட்டம், 1872 க்கு மாற்றாக இருக்கும் என்றும், இந்த சட்டங்கள் இந்த அவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு நாடு முழுவதும் செயல் படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்திய ஆன்மாவுடன் உருவாக்கப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் நமது குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் கூறினார்.
இந்த மசோதாக்கள் குறித்து 35 எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, அடிமைத்தன மனநிலை மற்றும் சின்னங்களை ஒழித்து, புதிய நம்பிக்கையுடன் கூடிய ஒரு சிறந்த இந்தியாவை விரைவில் உருவாக்க வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று அவர் கூறினார். காலனித்துவ சட்டங்களில் இருந்து இந்த நாடு விரைவில் சுதந்திரம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து வலியுறுத்தியதாகவும், அதன்படி, இந்த மூன்று பழைய சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வர உள்துறை அமைச்சகம் 2019 முதல் தீவிர விவாதங்களைத் தொடங்கியதாகவும் கூறினார். இந்த சட்டங்கள் ஒரு வெளிநாட்டு ஆட்சியாளரால் தனது ஆட்சியை நடத்தவும், அதன் அடிமை குடிமக்களை நிர்வகிக்கவும் உருவாக்கப்பட்டவை என்று கூறினார். நமது அரசியலமைப்பின் மூன்று அடிப்படை உணர்வுகளான தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று பழைய சட்டங்களுக்கு பதிலாக இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
Input & Image courtesy: News