19.37 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் வழங்கல்: ஜல் ஜீவன் திட்டத்தின் மைல்கல் சாதனை!

ஆகஸ்ட் 2019 முதல், நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் குடிநீர் வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நீர் மாநில விஷயமாக இருப்பதால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல் திட்டங்கள், பணிகளை திட்டமிடுதல், ஒப்புதல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.

ஆகஸ்ட் 2019 இல் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டபோது, நாட்டில் 3.23 கோடி (16.8%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 16.03.2025 நிலவரப்படி, சுமார் 12.29 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு இந்த இயக்கத்தின் கீழ் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 16.03.2025 நிலவரப்படி, நாட்டில் மொத்தமுள்ள 19.37 கோடி கிராமப்புற வீடுகளில், 15.52 கோடிக்கும் அதிகமான (80.19%) வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, 2024 டிசம்பரில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதற்காக "கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தின் நீரின் தரத்தை கண்காணிப்பதற்கான சுருக்கமான கையேடு" வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி சேகரிப்பு இடங்களை அடையாளம் காணுதல், சோதனை அளவுருக்கள் போன்ற நீர் தர சோதனை முறைகளை இந்தக் கையேடு பரிந்துரைக்கிறது.மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.