2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ - திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. தினேஷ் குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் மேயர் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும். ஒரு மேயராக நான் உங்களுக்கும் (விவசாயிகளுக்கும்) அரசிற்கும் ஒரு பாலமாக இருந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்.” என்றார்.
தமிழக உழவர் நல சங்கத்தின் தலைவர் திரு கு. செல்லமுத்து அவர்கள் பேசுகையில், “தேசத்தின் வளர்ச்சிக்கு தொழில்களை காப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நம்முடைய தாய் மண்ணை காப்பது. இந்தியாவில் எவ்வளவோ அமைப்புகள் இருந்தாலும் சத்குருவின் ஈஷா அமைப்பு தான் ‘மண் காப்போம்’ என்ற பெயரில் மண்ணை காக்கும் பணியில் உலகளவின் செய்து வருகிறது. கள்ளிமந்தையம் என்னும் என்னுடைய சிறிய ஊரில் மட்டும் ஆண்டுக்கு 10 கோடி அளவிற்கு ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்தே நாம் நம் மண்ணின் வளத்தை எந்தளவிற்கு அழித்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக, தென்னை விவசாயத்தை பொறுத்தவரை வியாபாரிகளும் இடைதரகர்களும் தான் அதிக லாபம் பெறுகிறார்கள். இந்த நிலையை மாற்றி விவசாயிகளும் அதிக லாபம் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ள ஈஷாவின் இந்த நிகழ்ச்சி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து மானிய விலையில் மக்களுக்கு விநியோகிக்கிறது. அதேபோல், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெயையும் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்” என்றார்.