2024 ஆம் ஆண்டின் முதல் 'மனதின் குரல்' நிகழ்ச்சி.. பிரதமர் மோடி நினைவு கூறிய 2 முக்கிய விஷயங்கள்..
ஞாயிற்றுக்கிழமை வருடத்தின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றி இருக்கிறார். இதில் அவர் கூறும் போது, "2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75ஆவது குடியரசுத் திருநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடினோம். இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டும் கூட, உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன. பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் மூன்றாவது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
3ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, இராமன், அன்னை சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். பிரபு இராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் நான் “தெய்வம் முதல் தேசம் வரை” என்று பேசியிருந்தேன், “இராமன் முதல் நாடு வரை” என்றும் கூறியிருந்தேன். அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள்.
ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
Input & Image courtesy: News