2024 - 25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு பணப் பலன்களை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு பணப் பலன்களை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மேலும் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன. பிரதமர் கிசான் திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் இரட்டிப்பாகலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பல விவசாயிகள் பலனடைவார்கள். ஏனெனில் தற்போது வரும் பணத்தை விட, இப்போது அதிக தொகை வரவிருக்கிறது.
பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கு 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது, பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வீதம் 3 தவணைகளில் செலுத்தபப்டுகிறது. இந்த ரூ.6 ஆயிரம் தொகையை ரூ.12 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசை ஆதரிக்கும் கட்சிகளும், சில அமைப்புகளும் விவசாயிகளுக்கான பலன்களை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என தெரிகிறது. அண்மையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் துணை அமைப்பான பாரதிய கிசான் சங்கம் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் நிதி அமைச்சரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதேபோல், விவசாய அமைச்சகத்தில் இருந்தும் சில முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
2018-19 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவு செய்தது. இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் தொடக்க முதலே கோரிக்கை விடுத்து வருவதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் பத்ரி நாராயண சவுத்ரி தெரிவித்துள்ளார். தற்போது பண வீக்கம் அதிகரித்து வருவதால், விவசாயிகளுக்கான செலவும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த முறை பட்ஜெட்டில் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், கிஷான் கிரெடிட் கார்டு கடன் வரம்பையும் அதிகரிக்குமாறு கேட்டுள்ளார். தற்போது கிசான் கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்பட்டாலும், விவசாயிகள் வெறும் 3 சதவீத வட்டி செலுத்தினால் போதும்.