2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு - பிரதமர் மோடி!
2036 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2036 - ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் மீதான இந்தியாவின் ஆர்வத்தை பிரதமர் மோடி நேற்று தனது சுதந்திர தின முறையிலும் வெளியிட்டார். இரு தொடர்பாக அவர் கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியக் கொடியை பறக்கவிட்ட வீரர்கள் இங்கே நம்முடன் இருக்கின்றனர்.
140 கோடி இந்தியர்கள் சார்பில் ஒவ்வொரு வீரர்களையும் வாழ்த்துகிறேன். 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என தெரிவித்தார். டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஆண்டு ஜி- 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திறன் இந்தியாவுக்கு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற நாடுகளும் போட்டியிட்டு வரும் நிலையில் இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அடுத்த ஆண்டு முடிவு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி பதக்கம் வென்றவர்களிடம் அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து கலகலப்பாக கலந்துரையாடினார்.