26 ஆண்டுகளாக பூசாரி வீட்டில் பத்திரமாக இருந்த சிலைகள்- பாதுகாப்பில்லை என்று எடுத்துச் சென்ற அறநிலையத்துறை!

Update: 2021-06-25 01:45 GMT
26 ஆண்டுகளாக பூசாரி வீட்டில் பத்திரமாக இருந்த சிலைகள்- பாதுகாப்பில்லை என்று எடுத்துச் சென்ற அறநிலையத்துறை!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பல ஆண்டுகளாக பூசாரி வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த கோவில் ஐம்பொன் சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்ற சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.புதுபட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான குருநாதர்-மகமாயி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வீரபத்திரரின் பெரிய சிலை மற்றும் சிறிய சிலை, ராக்காச்சி அம்மன், நடராஜர், விநாயகர், மகமாயி அம்மன், சிவகாமி அம்மன், இருளப்பசாமி, முத்து கருப்பசாமி என பத்து ஐம்பொன் சிலைகள் உள்ளன.

ஆண்டுதோறும் கோவில் திருவிழாவின் போது இந்த பத்து ஐம்பொன் சிலைகளும் பூசாரி வீட்டிலிருந்து எடுத்துச் சென்று கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் இந்த ஐம்பொன் சிலைகள் அனைத்தும் பூசாரி வீட்டுக்கு கொண்டு சென்று பத்திரமாக வைக்கப்படும். 1995ஆம் ஆண்டு இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகும் கோவில் திருவிழா முடிந்த பிறகு ஐம்பொன் சிலைகள் அனைத்தும் பூசாரி வீட்டிலேயே பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் தக்கார் தேவி தலைமையிலான குழுவினர், காவல்துறையினர் உதவியோடு பூசாரி வீட்டிற்குள் இருந்த 10 ஐம்பொன் சிலைகளை எடுத்துச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடுத்து சென்ற ஐம்பொன் சிலைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள உலோக திருமேனிநாதர் பாதுகாப்பு மையத்தில் வைத்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பத்து ஐம்பொன் சிலைகளின் மதிப்பு 10 கோடி முதல் 12 கோடி வரை இருக்கும் என்று தெரியவருகிறது. இவ்வளவு ஆண்டுகாலம் ஊர்மக்களால் பாதுகாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை தற்போது அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் ஐம்பொன் சிலைகள் பெருமளவில் திருட்டு போய்விட்ட நிலையில் அவற்றை பாதுகாக்க முடியாத அறநிலைத்துறை, தற்போது பூசாரி வீட்டில் பத்திரமாக வைக்கப் பட்டிருக்கும் சிலைகளை காப்பகத்திற்கு எடுத்துச் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் ஆண்டாள் கோவிலில் எப்படி சிலைகளுக்கு பூஜைகள் முறையாக நடக்கும் என்றும், கோவில்களில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அதைப் பின்பற்றாமல் கோவில் சிலைகளை அபகரித்துச் செல்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Source : Dinamani

Similar News