₹60,000 கோடி மதிப்புள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தை அடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களில் திருப்போரூரில் உள்ள 31 சென்ட் நிலத்தை அறநிலையத் துறை மீட்டுள்ளது.
திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோவிலுக்கு சொந்தமாக ₹60,000 கோடி மதிப்பில் 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அரசியல் கட்சியினர் உட்பட முக்கியமான இடங்களில் அமைந்துள்ள இந்த சொத்துகளை அபகரிக்க பலர் முயற்சி செய்துள்ளனர்.
கோவில் சொத்துக்களை மீட்க பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருப்போரூர் பகுதியில் உள்ள கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நீதிமன்றம் கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவை நிறுத்தி உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னர் இத்தகைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் கட்டமாக மாமல்லபுரம் ஆளவந்தான் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகள் அளவீடு செய்யப்பட்டன.
திருப்போரூரைச் சுற்றியுள்ள கண்ணகப்பட்டு, வேம்படி விநாயகர் கோவில் தெரு, சந்து தெரு, சவுபாக்கியா நகர் தனியார் குடியிருப்பு அருகில் உள்ள இடங்கள், நெம்மேலி செல்லும் சாலை, மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான 512 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளன. இவற்றை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.
அளவீட்டுப் பணியின் போது திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவில் 31 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த ஷெட்டை இழுத்து மூடி அறநிலையத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ₹3 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Source: தினமலர், தினத்தந்தி