தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த உற்சவ மூர்த்தி சிலைகள் கண்டுபிடிப்பு : ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் குழு அதிரடி

தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த உற்சவ மூர்த்தி சிலைகள் கண்டுபிடிப்பு : ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் குழு அதிரடி

Update: 2018-11-04 11:48 GMT
சென்னை, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த விழாக்களில் பயன்படுத்தப்படும் பழங்கால உற்சவ மூர்த்தி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ரன்வீர்ஷாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது கைப்பற்றப்பட்ட சுவாமி ஊர்வல சிலைகள், 300 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கும். ரன்வீர்ஷாவிடம் கைப்பற்ற சிகைளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை. சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர் என்று தினமலர்
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், தூண்கள் மற்றும் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, திருவாரூரில் உள்ள ரன்வீர் ஷாவின் சொகுசு பங்களா, திருவையாறில் உள்ள சரபோஜி மன்னர் கால அரண்மனை ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது என்று பாலிமர்
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது. அதே போல், காஞ்சிபுரம் மாவட்டம் முகுல்வாடி மற்றும் படப்பையில் உள்ள பண்ணைகளிலும் சோதனை நடைபெற்றதில், மொத்தம் 224 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ரன்வீர் ஷாவின் தொழில் கூட்டாளியும், பெண் தொழிலதிபருமான கிரண் ராவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிலைகளை பறிமுதல் செய்ததோடு, ரன்வீர் ஷா, கிரண் ராவ் உள்பட 14 பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறியுள்ள போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

Similar News