பிரிவினை சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட திமுக - வானதி சீனிவாசன் விமர்சனம்..!
பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி ஊடகங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள், தேர்தலில் வெற்றி பெற 'இண்டி' கூட்டணி செய்யும் சதித் திட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறார்.
தேர்தல் வெற்றிக்காக குடும்ப, ஊழல் கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவிப்பது பற்றி தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சலுகை அளிப்பதால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்குவது பற்றியும், அரசு பேருந்து கழகங்களின் கட்டமைப்புகள் சிதைந்து வருவது பற்றியும் பிரதமர் மோடி தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி எதை பேசினாலும் அதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்களின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி, "இலவசத் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுகிறார்" என 'இண்டி' கூட்டணி கட்சியினர் திரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18-5-2024) வெளியிட்ட அறிக்கையில், "உத்தரப்பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாக தன்னுடைய கற்பனைக் கதைகளைபிரதமர் மோடி கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார். பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது" என்று வழக்கம்போல பிரதமர் மோடி பேசியதை திரித்திருக்கிறார்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்ற பழமொழிக்கு ஏற்பதான். வட மாநில மக்கள் பற்றிய திமுகவினர் அவதூறு செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம். அதனால் மத்திய அரசு அவர்களுக்கு அதிக நிதியும் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டோர் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். "உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்களுக்கு மட்டும் எப்படி அதிக நிதி கொடுக்கலாம்?" என்று அவர்கள் கேட்காத நாளில்லை.