4 தலைமுறையாக இறந்தவர்களின் உடல் இப்படித்தான் அடக்கம் செய்யப்படுகிறதா?? இதற்கு என்னதான் தீர்வு!!

By :  G Pradeep
Update: 2025-11-28 11:10 GMT

மயிலாடுதுறை ஆலாலசுந்தரம் ஊராட்சியில் உள்ள திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் 20க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் வயல் வழியாக இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் நிலை நான்கு தலைமுறையை தாண்டி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் பெய்து வரும் மழையால் அப்பகுதியில் வயல்வெளிகளில் நீர் நிறைந்து காணப்படும் நிலையில் கடந்த திங்கட்கிழமை 80 வயது உடைய கனகராஜ் என்பவர் மரணமடைந்த நிலையில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக நீர் நிறைந்த வயல் வழியாக அவருடைய உடலை எடுத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்த நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர். நான்கு தலைமுறை தாண்டியும் இதே போன்று 250மீ தூரம் வயல்வெளிகளை கடந்து இறந்தவர்களின் உடல்களை மழை வெயில் காலம் பார்க்காமல் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் அங்கிருக்கும் சுடுகாடும் பத்துக்கு பத்து அளவில் சிறியதாகவும், மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் அதனை சரி செய்து அடிப்படை வசதிகளை கொண்ட சில மாற்றங்கள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் காட்டிற்கு செல்லக்கூடிய சாலை அமைப்பதற்கான நிலம் தனி ஒரு நபரின் நிலமாக இருப்பதால் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக சாலை அமைப்பதற்கு தேவையான நிலம் உரிமையாளரிடம் பெறப்பட்டு நிலத்தை நகராட்சி ஆணையர் கொள்ளிடம் பெயரில் மாற்றி தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Tags:    

Similar News