40 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட கோவில் மண்டபங்கள் - நீதிமன்ற உத்தரவால் அதிரடி!
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுவாமி கோவிலில் ராஜகோபுரம் அருகே அமைந்துள்ள கோவில் மண்டபங்கள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த கடைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீக்கப்பட்டன.
ரங்கநாதசுவாமி கோயில் ராஜகோபுரத்திற்கு முன் உள்ள நான்கு கால் மண்டபங்களை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த ராயர் மண்டபத்தில் இயங்கிவந்த கடைகளில் மின்கசிவால் தீ விபத்து நேர்ந்த போது பெரும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து கோவில்களில் உள்ள மண்டபங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுத்தது. இதன் அடிப்படையில் கோவில்களுக்கு உள்ளும் வெளியிலும் மண்டபங்களில் செயல்பட்டு வந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் ராஜ கோபுரம் ஒன்று உள்ள நான்கு கால் மண்டபங்களில் செயல்பட்டு வந்த கடைகளையும் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறநிலையத் துறை நோட்டீஸ் வழங்கியது. ஆனால் பல ஆண்டுகளாக மண்டபங்களில் கடை நடத்தி வந்தவர்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கடைகள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபத்தில் இயங்குவதால், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த மண்டபத்தை சேதப்படுத்துவதாகவும், அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை என்பதால் கடைகளை காலி செய்ய சொன்னது சரியே என்றும் தீர்ப்பளித்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மண்டபங்கள் வியாபார நோக்கத்திற்காக கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி வியாபாரிகளின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.