500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு!! ஐகோர்ட் உத்தரவு!!
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் கரூர் மாவட்டத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோவில், வஞ்சுளீஸ்வரர் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உட்பட 64 கோவிலுக்கு சொந்தமான ஏராளமான இடங்கள் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் சில சொத்துக்களை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றி எழுதப்பட்டிருப்பதாகவும், கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அதனை மீட்டு கோவிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சொத்துக்களை யாக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்டெடுக்க கோரி உத்திரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் இணைந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மனுதாரர் தரப்பிலிருந்து கோவில் நிலம் குறித்து வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டில் தயாரித்த அறிக்கையானது தற்பொழுது மாயமாகியுள்ளது என்றும் கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சொத்தின் மதிப்பு 35 கோடிகும் மேல் எனவும் எப்படியாவது அந்த நிலத்தை மீட்டு கொடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் எத்தனை கோவில்கள் இருக்கின்றது என்றும், கோவில்களின் சொத்து விவரம் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் எவ்வளவு என்றும் தொடர்ச்சியாக சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும் கரூர் மாவட்ட ஆட்சியரும், அறநிலையத்துறை ஆணையரும் இணைந்து இது குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே 2015 ஆண்டில் தொலைந்து போன கோப்புகளையும் சேர்த்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதி ஒத்திவைத்தனர்.