ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்... நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..
ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை 2024 மார்ச் 7 ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில், ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தை அடையும் பிரதமர், அங்கு 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள 'முழுமையான விவசாய மேம்பாட்டு திட்டத்தை'ப் பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களையும் அவர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ‘உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' மற்றும் 'இந்தியாவுக்கு செல்லுங்கள்' என்னும் உலக அளவிலான பிரச்சாரத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களையும் அவர் அறிவிப்பார். இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக அரசுத் தேர்வில் சேரும் சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குவார், மேலும் பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார். ஜம்மு-காஷ்மீரின் வேளாண் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 'முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய களங்களில் முழு அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.
இந்தத் திட்டம் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளை பிரத்யேக தக்ஷ் கிசான் போர்ட்டல் மூலம் திறன் மேம்பாட்டுடன் ஆயத்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2000 உழவர் சேவை மையங்கள் நிறுவப்பட்டு, விவசாய சமூகத்தின் நலனுக்காக வலுவான மதிப்புச் சங்கிலிகள் அமைக்கப்படும். இந்தத் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான குறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். நாடு முழுவதும் உள்ள முக்கிய புனித தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும்.
Input & Image courtesy: News