ரூ.62 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி கட்டிடம்.. 3 மாதத்தில் இடிந்து விழுந்து விபத்து..
ரூ. 62 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் அமைந்துள்ளது தான் அரசு நடுநிலைப் பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் சுமார் 155 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில், 2010ல், அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டத்தின் கீழ், 9.75 லட்சம் ரூபாயில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 2020ல் இக்கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் மோசமான நிலையிலும், அதே வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. ஆகவே சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றாக 62 லட்சம் ரூபாயில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஒரு புதிய வகுப்பறை கட்டிடத்தின் மேற்பூச்சு இடிந்து விழுந்ததன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், புதிய கட்டடத்தில் பைகளை வைத்து, இறை வணக்கக் கூட்டத்திற்கு சென்றனர். அப்போது, 7ம் வகுப்பு மாணவர்கள் அமரும் இடத்தின் கூரையில் இருந்து, சிமென்ட் காரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தன. இதில், மின்விசிறியின் ஒரு பகுதி சேதமடைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். அவர்கள் இறைவணக்கக் கூட்டத்தில் இருந்ததால் தப்பித்தனர்.
திமுக அரசு மீது பெரும் அதிருப்தி:
ஏற்கனவே தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால், 10 ஆண்டுகளில் கட்டடம் சேதமடைந்தது. அதற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடத்தின் கூரை, ஆறு மாதம்கூட தாக்குப்பிடிக்காமல் பெயர்ந்து விழுந்ததால், அக்கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தில் இதுபோல் நடப்பது இதுதான் முதல் முறையா என்று கேட்டால் கிடையாது. சில தினங்களுக்கு முன்பு இதே காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் இதுபோல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே திமுக அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy:News