DRDO என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DIPCOVAN என்ற கொரோனா நோய்தொற்று கண்டறியும் கருவியை உருவாக்கி உள்ளது. இந்த கருவி மூலம் பரிசோதனை செய்வதற்கு 75 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துடன் இணைந்து DRDO இந்த கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கருவி மூலம் கொரோனா வைரஸை நுண்ணியமாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கருவியானது டெல்லியில் உள்ள குறிப்பிட்ட கொரோனா நோய்க்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளின் மாதிரிகளைக் கொண்டு விரிவாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த கருவி மூன்று கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கு கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்த நிலையில் மே மாதம் இதன் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு மருந்துகளின் தலைமை கட்டுப்பாட்டாளர், மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தது.
இந்த கருவியின் மூலம் பரிசோதனை செய்வதற்கு 75 நிமிடங்கள் போதுமானதாகும். மேலும் இந்த கருவியை 18 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் பரிசோதனை செய்வதற்கு வெறும் 75 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை உடனடியாக கண்டறிந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.