தமிழ்நாட்டில் 7559 ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்!
தமிழ்நாட்டில் 7559 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கடந்து 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா முன்னெடுப்பை தொடங்கியது. இதன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான நிதி திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிதி திட்டம் , ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் ஆகிய மூன்று முன்னணி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது .
ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்கநிலை நிதியத்தில் ரூபாய் 945 கோடி மூலதனம் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் ரூபாய் 86.10 கோடி அளவுக்கு இருபது தொழில் காப்பகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு தொழில் காப்பகங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி வரை ரூபாய் 43.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியத்தில் ₹ 10,000 கோடி மூலதனம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி மொத்தம் ரூபாய் 500 கோடியை 6 மாற்று முதலீட்டு நிதியத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரை மாற்று முதலீட்டு நிதியத்திற்கு ₹384 கோடி வழங்கியுள்ளது. நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் தேசிய கடன் உத்திரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் - 1ஆம் தேதி முதல் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி தகுதியான அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூபாய் 8.65 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு 300-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1,17,254 ஆக அதிகரித்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 7 ஆயிரத்து 559 புத்தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இந்த தகவல்களை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் அளித்த எழுத்து பூர்வ பதிவில் தெரிவித்துள்ளார்.
SOURCE :DAILY THANTHI