கத்தாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள் மேல்முறையீடு செய்ய 60 நாள் கால அவகாசம்!
கத்தாரில் எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு பேர் மேற்கு ஆசியா நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்க கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக எட்டு பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட் கடந்த அக்டோபர்- 26 ஆம் தேதி 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர் கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் மரண தண்டனையை சிறைதண்டனையாக குறைத்து மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது. எட்டு பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது .
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
SOURCE :DAILY THANTHI