919 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்.. பிரகாசமாக இருக்கும் குழந்தைகளின் எதிர்காலம்..

Update: 2024-10-05 16:38 GMT

குஜராத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உட்பட 919 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். நவராத்திரி வாழ்த்துக்களுடன் தமது உரையைத் தொடங்கிய அமித் ஷா, 919 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, சுகாதாரம், கல்வி, நூலகங்கள், பூங்காக்கள் மற்றும் சிறிய சாலையோர வியாபாரிகள் தொடர்பான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சியின் முயற்சிகள் காரணமாக, தனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து நகராட்சி தொடக்கப் பள்ளிகளும் வெற்றிகரமாக மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று தமது நன்றியை அவர் தெரிவித்தார்.


ஆரம்பக் கல்விக் குழுவின் முன்முயற்சிகளால் குழந்தைகள் முறையாக பயனடைந்தால், இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். காந்திநகர் மக்களவைத் தொகுதியில் இன்று சுமார் 472 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் அகமதாபாத் நகரில் வசிப்பவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.


குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், கடந்த சில ஆண்டுகளில், அகமதாபாத் நகரம், கலோல் மற்றும் சனந்த் தாலுகா, அகமதாபாத் நகரின் சில பகுதிகள் மற்றும் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் 23,951 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று திரு ஷா மேலும் கூறினார். மேலும், 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்றும் அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 37,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News