ரூ.93,376 கோடியில் 98 சாகர்மாலா திட்டங்கள்: தமிழகத்திற்கு கொடுத்த மோடி அரசு!

தமிழ்நாட்டில் ரூ.93,376 கோடி மதிப்பிலான 98 சாகர்மாலா திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினர் திரு எம் எஸ் தரணிவேந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதன் மூலம் துறைமுக நவீனமயம், துறைமுகத்துடன் போக்குவரத்து இணைப்பு, துறைமுகத்தை முதன்மைப்படுத்திய தொழில்மயம், கடலோர சமூகத்தினர் மேம்பாடு, கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து போன்றவை விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

இந்த திட்டங்களில் ரூ.37,617 கோடி மதிப்பிலான 54 திட்டங்கள் நிறைவடைந்திருப்பதாகவும், ரூ.13,625 கோடி மதிப்பிலான 17 திட்டங்கள் செயல்படுத்த தயார் நிலையில் இருப்பதாகவும், ரூ.42,133 கோடி மதிப்பிலான 27 திட்டங்களில் பணிகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5,294 கோடி மதிப்பிலான 8 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு 2 திட்டங்கள் நிறைவடைந்திருப்பதாகவும் 3 திட்டங்கள் அமலாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் 3 திட்டங்களின் பணிகள் நடைபெறுவதாகவும் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு பகுதியளவு நிதியுதவி அளிக்கப்படும் 22 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. ரூ.1240 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களில் 15 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 6 திட்டங்கள் அமல்படுத்த தயார்நிலையில் உள்ளன. ஒரு திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.