உக்ரைனில் முன் அறிவிப்பு இன்றி எல்லைக்கு செல்லக்கூடாது: இந்திய தூதரகம் அறிவுரை!

Update: 2022-02-26 07:47 GMT

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மூன்றாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால் அந்நாட்டில் வான்வெளி மூலமாக ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் அந்நாட்டின் தலைநகரை கைப்பற்றும் நிலையில் இருப்பதால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் உயிர் தப்பித்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ரஷ்ய படைகள் வேகமாக உக்ரைன் தலைநகரை நோக்கி முன்னேறி செல்கின்றனர். இதனால் ஆக்ரோஷமாக ரஷ்ய படைகள் குண்டுமழையை பொழிந்து வருகிறது. அங்குள்ள இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். முதல் நாள் போரிலேயே உக்ரைன் உருகுலைந்துவிட்டது. அந்நாட்டு அதிபர் வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

இதனிடையே உக்ரைனில் வசித்து வரும் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர்கள் மாணவர்கள் ஆவர். தற்போது உக்ரைன் அரசு தனது வான் எல்லையை மூடிவிட்டதால் மீட்பு பணிகளுக்காக விமானங்கள் செல்ல முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது. இதனை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் சாலை மார்க்கமாக மாணவர்களை நகர்த்தி வருகிறது. அதன்படி உக்ரைனின் மிகவும் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி, போலந்து, சுலோவாகியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அங்குள்ள இந்திய தூதரகம் சோதனை முகாம்களை அமைத்துள்ளது.

இந்நிலையில், முன்அறிவிப்பு இல்லாமல் யாரும் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வெளியேறுபவர்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்வது அவசியமாகும். மேலும், உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி நகர்வதை விட மிகவும் பாதுகாப்பானது ஆகும். எனவே உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வசித்து வருபவர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தங்களின் குடியிருப்புகளிலேயே காத்திருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது. அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News