வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கிய அண்ணாமலை!
மிக்ஜம் புயல் மழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அண்ணாமலை நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். பின்னர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வங்க கடலில் உருவாகிய மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன .குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது வேளச்சேரியில் மூன்று நாட்களாகியும் இன்னும் வடியவில்லை .
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏஜிஎஸ் காலனி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் முழங்கால் அளவு வெள்ளநீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கேட்டார். அப்போது அரசு நிவாரண உதவிகள் கிடைக்கிறதா? மழை நீர் தேங்க என்ன காரணம்? என்று மக்களிடம் கேட்டார்.
அங்கிருந்தவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் குடிநீர் பாட்டில்கள் பிரட் போன்றவற்றை வழங்கினார். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உணவு பொட்டலங்கள் வழங்கினார். தாமஸ் சாலையில் ஐந்து கிலோ அரிசி, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். இதேபோல எழும்பூர் ஆர்.வி நகர், ராயபுரம் ஆர்.கே நகர் சின்னமாத்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
SOURCE :DAILY THANTHI