இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம்: மார்ச் 15-ல் பிரதமர் தலைமையில் கூட்டம்!
இரு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு மார்ச் 15-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் நிறைவடைய மூன்று ஆண்டுகள் இருந்தன. அத்துடன் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற்றபின் அந்த பதவியை ஏற்கும் நிலையில் அருண் கோயல் இருந்தார்.
இந்நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை ஏற்றுக்கொண்டார். எனினும் அவர் ராஜினாமா செய்ததற்கான காரணம் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்ற தேர்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதை அடுத்து மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டும் பதிவில் உள்ளார். இரு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது :-
இருதேர்தல் ஆணையர் பதவி இடங்களுக்கு தலா ஐந்து பேர் அடங்கிய தனித்தனி பட்டியலை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலர் கொண்ட தேர்தல் குழு தயாரிக்கும். அதன் பின்னர் தேர்தல் குழுவின் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்க இருவரையே பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு செய்யும். அந்த தேர்வின் படி தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களின் பெயர்களை இறுதி செய்ய மார்ச் 15-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையான உயர் அதிகாரக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
SOURCE :Dinamani