போலி வீடியோக்கள் பற்றி விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும் - பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்கள் தயாரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊடகங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Update: 2023-11-18 13:36 GMT

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்கள் சம்பந்தப்பட்ட போலி வீடியோக்கள் உருவாக்குவது அதிகரித்துள்ளது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரை பற்றி போலி வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க தலைமையகத்தில் பா.ஜ.கவின் தீபாவளி சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பத்திரிகையாளர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது:-


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்படும் போலி வீடியோக்களால் புதிய பிரச்சினை உருவாகி வருகிறது. பன்முகத்தன்மை கொண்ட நமது சமுதாயத்தில் இந்த வீடியோக்கள் பெரும் பிரச்சனையை உருவாக்கும். ஊடகங்களில் வெளியாவதை மக்கள் பொதுவாக நம்பி விடுவதால் இந்த விவகாரம் அதிருப்தியையும் பற்றவைக்கும். சமூகத்தில் பெரும்பாலானோருக்கு அதை சரிபார்க்கும் வசதியும் இல்லை. நான் 'கர்பா நடனம் ' ஆடுவது போன்ற போலி வீடியோ கூட வெளியிட்டுள்ளனர்.


பள்ளி பருவத்தில் இருந்தே அந்த நடனத்தை நான் ஆடியது இல்லை. என் மீது அபிமானம் கொண்ட சிலர் அதை எனக்கு அனுப்பி வைத்தனர். எனவே செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்கள் தயாரிப்பது பற்றி ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். சிகரெட் பாக்கெட்டில் சுகாதார எச்சரிக்கை இருப்பது போல் போலி வீடியோக்களில் இது போலியானது என்று எச்சரிக்கை வாசகம் இடம் பெற செய்யலாம் என்று நான் சமீபத்தில் சாட் ஜிபிடி நிபுணர்களிடம் யோசனை தெரிவித்தேன்.


முன்பெல்லாம் சில சர்ச்சை கருத்துக்களுடன் கூடிய சினிமா வரும் போகும். ஆனால் இப்போது அவை பெரிய பிரச்சினை ஆகி விடுகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சில சமூகத்தினரை இழிவுபடுத்தி இருந்தால் அந்த படத்தை திரையிடுவது கடினமாகிவிடுகிறது. கொரோனா காலத்தில் இந்தியா படைத்த சாதனைகள் இந்தியா நிற்கப்போவதில்லை என்று மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடும் போது கொரோனா முற்றிலும் மறைந்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News