பிரதமர் மோடிஜி ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்காங்க - அரபு நாடுகளுக்கு வேலூர் இப்ராஹிம் கண்டனம்!
இந்திய தேசத்தின் உள்விவகாரங்களில் அரபு நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் பாரத மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பா.ஜ.க. தேசிய சிறுபான்மையின செயலாளர் வேலூர் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். அதே போன்று பா.ஜ.க.வை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இவர்களின் கருத்துக்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை சமூக வலைதளம் மூலமாக பரப்பியதை தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள முஸ்லிம் மக்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக நபிகள் நாயகம் பற்றி பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இந்திய மக்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்றார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்ததாக விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய சிறுபான்மையின செயலாளர் வேலூர் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவ்வப்போது சில குறைமதியாளர்கள் #நபிகள்_நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிப்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,
அதை ஜனநாயக ரீதியில் நாம் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம்,
இதை வாய்ப்பாக பயன்படுத்தி என் தேசத்தின் உள்விவகாரங்களில் அரபு நாடுகள் தலையிடும் என்றால் அதை ஒருபோதும் பாரத மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,
#மோடி_ஜி அவர்களின் ஆட்சியில் உலகின் மற்ற நாடுகளை விட பாரதத்தில் #இஸ்லாமியர்கள் பாதுகாப்புடனும் அனைத்து உரிமைகளையும் பெற்று சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு அறிவிப்போம்,
ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: One India Tamil