எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பற்றி தெரியாத பல தகவல்கள் !
Why is bone marrow transplant is done?
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது, நோய்தொற்று அல்லது கீமோதெரபி சிகிச்சை போன்றவற்றால் மனித உடலின் எலும்பு மஜ்ஜை சேதமடையும் போது அதை மாற்றுவதற்காக செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறையில் ஆரோக்கியமான இரத்த ஸ்டெம் செல்கள் உடலில் செலுத்தப்படுகிறது. இவை புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன மற்றும் புதிய எலும்பு மஜ்ஜையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எலும்பு மஜ்ஜை என்பது எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற கொழுப்பு நிறைந்த திசு ஆகும். இவை எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உதவுகின்றன.
எலும்பு மஜ்ஜை மாற்றுதலின் போது சேதமடைந்த ஸ்டெம் செல்களை ஆரோக்கியமான செல்களைக் கொண்டு மாற்றுகின்றனர். இது உங்கள் உடலில் உண்டாகும் நோய்த்தொற்றுகள் மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகளைத் தவிர்க்க உதவுகிறது. இது, அப்ளாஸ்டிக் அனீமியா, லிம்போமா, லுகேமியா, தலசீமியா, இரத்த சோகை, மல்டிபிள் மைலோமா போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் நிரந்தர மற்றும் பயனுள்ள அறுவை சிகிச்சை முறையாகும். நீண்ட காலமாக ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எலும்பு மஜ்ஜை சேதமடைகிறது. இத்தகைய நிலையில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து, அறுவை சிகிச்சைக்கு முன் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறியவேண்டியது அவசியமாகிறது. எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் பயாப்ஸி, இரத்தப் பரிசோதனை மற்றும் சில ஆய்வக பரிசோதனைகளைக் கொண்டு தரமான மற்றும் சரியான பகுப்பாய்வுகளைப் பெறுகின்றனர். இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம் என்பது இரத்த புற்றுநோய், இரத்த சோகை போன்ற எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பல நோய்களுக்கான அறிகுறியாகும். எலும்பு மஜ்ஜை செல்கள் பெரும்பாலும் இடுப்பு எலும்பிலிருந்து பயாப்ஸிக்காக எடுக்கப்படுகின்றன. மேலும், இந்த செல்கள் நன்கு ஆராயப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை மாற்றுதல் நன்கொடையாளரைப் பொறுத்து பல்வேறு வழிகளில், இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிகிறது.