ஆப்கன்: மனிதநேய உதவியின்றி 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு -UNICEF தகவல் !
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது மனிதநேயம் உதவியின்றி 550 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக UNICEF தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. கடந்த சில மாதங்களாக தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையே நடந்த சண்டையிலும், துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான். இந்த ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 550 குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டிலும், குண்டுவீச்சிலும் பலியாகியுள்ளனர். 1400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர் என்று UNICEF தகவல் தெரிவித்துள்ளது.
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் மட்டும் ஒரு கோடி குழந்தைகளுக்கு உடனடியாக மனிதநேய உதவிகள் தேவை என்று UNICEF தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெஃப் பிரதிநிதி ஹெர்வ் லுடோவிக் இதுபற்றி கூறுகையில், "காபூல் நகரில் நடந்து வரும் சண்டையில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கான உரிமை ஒட்டுமொத்தமாக மீறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் தலிபான்கள் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் 550 குழந்தைகள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர். 1400க்கும் மேற்பட்ட குழந்தைகள், கை, கால்களை இழந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்தபின் முதல் முறையாக உலக சுகாதார அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. ஆப்கனில் இன்னும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக அடிப்படை சுகாதார உதவி தேவைப்படுகிறது. வழக்கம் போல உலக சுகாதார நிறுவனம் ஆப்கானில் உள்ள குழந்தைகளின் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Image courtesy:ANI news