பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் !

இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஈடுபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Update: 2021-08-10 11:04 GMT

காஷ்மீரில் பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த சதிச் செயல்களை ராணுவ வீரர்கள் தக்க சமயத்தில் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ஆயுதங்களை இறக்கி தீவிரவாதிகள் சதிச்செயலில் ஈடுபட இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினர் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பூஞ்ச் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், பிஸ்டல்கள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த யாசிர் ஹுசைன், உஸ்மான் காதிர் என்ற 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மிகப் பெரிய சதி செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னதாக காஷ்மீர் குல்காம் மாவட்ட பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஈடுபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் மாநில பாஜக தலைவர் அல்டாஃப் தாக்கூர் அகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source : India டுடே


Image courtesy: India today

Tags:    

Similar News