ஆப்கன்: ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் சூழ்நிலை!
ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல் அங்கு நிலவுவதாக UNICEF தகவலை கூறியுள்ளது.
தற்பொழுது ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கில் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் குறைந்தது ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்குக் காத்திருப்பதாக UNICEF தகவல்களை தெரிவித்துள்ளது.
அங்கு உதவி தேவைப்படும் குழந்தைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் UNICEF தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்தின் செயல்பாட்டு இயக்குநரான டேவிட் பெஸ்லி கூறுகையில், "ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவீதம் பேர், அதாவது 1.4 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பல ஆண்டுகளாக அங்கே வறட்சி, உள்நாட்டு கிளர்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியன நிலவி வருகின்றன. மேலும் தற்பொழுது ஏற்படும் நோய்த்தொற்றின் காரணமாக மக்களின் வருமான நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம் என்றும்" அவர் கூறினார்.
போர், இயற்கை சீற்றம் எதுவானாலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களுமாகத் தான் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகள் தற்பொழுது நெருக்கடியான சூழலில் உள்ளார்கள். இதன் காரணமாக அங்கு சர்வதேச அமைப்புகளும் முதலீடு செய்திருந்தன. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரம் தலிபான்கள்வசம் சென்றுள்ளதால் உலக வங்கி ஆப்கன் மக்களுக்கு உதவிகளை நிறுத்தியுள்ளது. 2002 தொடங்கி இதுவரை உலகவங்கி ஆப்கனுக்கு 5.3 பில்லியன் டாலர் வரை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Input:https://afghanistan/remarks-unicef-afghanistan-representative-herv-ludovic-de-lys-situation-children
Image courtesy:wikipedia