கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்களின் வழக்கில் மத்திய அரசு நடவடிக்கை!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் வழக்கை மேல்முறையீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-11-17 12:01 GMT

இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் உட்பட எட்டு முன்னாள் வீரர்கள் கத்தாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இவர்கள் அங்கே உளவு பார்த்ததாக கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து. கடந்த மாதம் 26- ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக கடும் அதிர்ச்சி வெளியிட்ட மத்திய அரசு இந்த விவகாரத்தில் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.தற்போது இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-


இந்த வழக்கு தற்போது அங்கு சட்ட நடவடிக்கையில் உள்ளது. நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். மேலும் சிறையில் இருக்கும் 8 பேருக்கும் அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எந்த விதமான யூகங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். வழக்கின் முழு தீர்ப்பும் கத்தார் தரப்பால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் அப்பீல் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதில் நேர்மறையான முடிவு வரும் என நம்புகிறோம். அப்பீல் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை .இவ்வாறு அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இந்த வழக்கில் கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்த போதும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் குறித்து இந்திய தரப்போ கத்தார் தரப்போ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Similar News