சீனாவில் 1000 ஆண்டுகளாக இல்லாத வெள்ளம்- அதிர்ச்சியூட்டும் காட்சிகள் !

Floods that have not occurred in China for 1000 years - shocking scenes!

Update: 2021-08-03 03:25 GMT

கவிழ்ந்து கிடந்த கார்களில் மாட்டிக்கொண்ட மக்களும், தெருக்களிலும் சுரங்கப் பாதைகளும் வழிந்தோடும் வெள்ளமும் நிறைந்த கொடூரமான காட்சிகளை சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பார்க்க நேரிடுகிறது. இவை அனைத்தும் சீனாவில் இருந்து வெளிப்படும் புகைப்படங்களாகும்.

சீனாவின் சின்குவா நியூஸ் தொலைக்காட்சி வீடியோக்களில், ஷெங்ஷாவ் மாவட்டத்தில் கழுத்தளவு உள்ள தண்ணீரில் மெட்ரோ லைனில் மக்கள் இருக்கும் காட்சி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. 1.2 கோடி பேர் மக்கள் வசிக்கும் இம்மாவட்டத்தில் மீட்புப் படையினருக்கு மக்கள் காத்திருக்கும் காட்சியைப் பார்க்கலாம்.



சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் ஆயிரம் வருடங்களுக்கு இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இந்த மாகாணம் 617.1 mm மழையை பதிவு செய்துள்ளதாகவும், இது பொதுவாக அங்கு வருடம் முழுக்க பெய்யும் மழையின் சராசரி அளவு (640.8 mm) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெள்ளத்தினால் கிட்டத்தட்ட 1.24 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சுவர்கள் இடிந்து விழுந்து மரணங்களும் நேர்கின்றன. சுரங்கப்பாதைகள், தெருக்கள், ஹோட்டல்கள், பெரிய கட்டிடங்களில் நீர் புகுந்தது மட்டுமல்லாமல் இது நகரத்தின் பொதுப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.




 

புத்த துறவிகளின் கோவிலான ஷாவ்லின் கோவிலும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதால், சீன ராணுவம் 5200 வீரர்களை அனுப்பி மக்களை தேட மற்றும் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.




 ஷெங்ஷாவ் நகரத்தில் ஒரு பள்ளியில் இருந்து 150 குழந்தைகள் மற்றும் பணியாளர்களை தீயணைப்பு துறையினர் மீட்கும் காட்சி பரவலாக பரவி வருகிறது. பள்ளிகளும், மருத்துவமனைகளும் நிறுத்தப்பட்ட நிலையில் நூலகங்கள், சினிமாக்கள், மியூசியங்கள் மக்கள் தற்காலிகமாக தங்கும் இடங்களாக மாறியுள்ளது.

கடந்த புதனன்று சீன அதிபர் ஜீ ஜிங்ப்பிங், "குறிப்பிடத்தக்க அளவு உயிரிழப்பு, பொதுச் சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்". தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. ரயில்வே சேவை ஓரளவுக்கு நிறுத்தப்பட்டு, பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மழையால் பல அணைகளில் மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் சில அணைகளை இராணுவத்தினரே வெடிவைத்து தகர்த்தனர்.




 வெள்ள நிவாரண குழுக்களை நியமித்து மக்களின் உயிரிழப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல், வேறு வியாதிகள் பரவாமல் இருக்க சுகாதாரத்தை பேணும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீன வெள்ளம் இதுவரை வராமல் இருந்ததில்லை. வருடாவருடம் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களை சந்தித்து, உயிரிழப்பையும் பொதுச் சொத்துக்கள் இழப்பையும் சீனா சந்தித்து வருகிறது. ஆனாலும் சமீப காலங்களாக இது பருவநிலை மாற்றம் மற்றும் விரைவான நகரமயமாக்கல் பிரச்சனையினால் தீவிரமாகி வருகிறது. கான்கிரீட் தளங்கள் அதிகரிக்க அதிகரிக்க நீர் தேங்கும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

கடந்த வருடம் அங்கு வந்த வெள்ளத்தினால் 200 பேருக்கும் மேலாக உயிர் இழந்தது மட்டுமல்லாமல் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நேரடியான பாதிப்பும் ஏற்பட்டது. ஷெங்ஷாவ் நகரம் சீனாவின் மஞ்சள் நதி கரையில் இருக்கிறது. இது சீனாவின் இரண்டாவது நீளமான நதியாகும். இதனால்தான் இப்பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. சீனா மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள், அணைகள் ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது என்றாலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும் பொழுது வெள்ளம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

அதிகாரிகள் உலகத்திலேயே மிகப்பெரிய ஹைட்ரோ எலக்ட்ரிக் நிலையமான த்ரீ கோர்ஜஸ் அணையின் வலிமை பற்றி கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் தீவிர வானிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தீவிர வெப்ப அலைகளை சந்தித்து வருகின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரத்தில் 52 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்ப நிலை உயர்ந்தது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பருவமழை இந்தியாவில் மிகவும் ஆபத்தானது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  


Images courtesy: Associated Press (AP)

Tags:    

Similar News