கொரோனா தீவிரம்: சீன நகரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் அதன் கோரமுகத்தை காட்டியது. இதனால் 45 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். பல கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். இதனிடையே இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுப்பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது.
தடுப்பூசி கண்டுப்பிடிப்பதற்கு முன்னர் ஊரடங்கு ஒன்றுதான் தொற்றை தடுக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. முதன் முதலில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்தது. இதில் தொற்று பரவுவது வேகமாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் உள்ள வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூ. இங்கு கடந்த 25ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி முதல் மொத்தம் 39 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலையை தவிர மற்ற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைக்கு செல்வதற்கு அனுமதி சீட்டு பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar