ஏழைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உரிமை மற்றும் மேம்பட்ட வாழ்க்கையை எளிதாக்குவது மிகவும் அவசியம் - பிரதமர்.!

ஏழைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உரிமை மற்றும் மேம்பட்ட வாழ்க்கையை எளிதாக்குவது மிகவும் அவசியம் - பிரதமர்.!

Update: 2020-07-24 03:24 GMT

மணிப்பூரில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்திற்கு பிரதமர்  காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடு அயராது போராடிவரும் வேளையில், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஆகிய இரட்டை சவால்களை எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ஏராளமானோர் உயிரிழந்திருப்பதுடன், பலர் வீடற்றவர்களாகியுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில், மக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட மணிப்பூர் மாநில அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், மனிப்பூரில் உள்ள 25 லட்சம் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று, மணிப்பூரில் உள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைப்பதுடன், இம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு பெரும் நிம்மதியை அளிப்பதாகவும் அமையும் என்றார். பெருநகர இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களுக்கும் பயனளிக்கும் என்றும் திரு.மோடி குறிப்பிட்டார். அடுத்த 20 ஆண்டு தேவையைக் கருத்தில் கொண்டு, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பல லட்சக் கணக்கான மக்களுக்கு, அவர்களது வீட்டிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறுவதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

நாட்டிலுள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் நோக்குடன், கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், மக்களின் பங்களிப்புடன் தற்போது நாட்டில் தினந்தோறும்சுமார் ஒரு லட்சம் குடிநீர் இனைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

வாழ்க்கையை எளிதாக்குவது, மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கு அவசியம் என்பதோடு, ஏழைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உரிமை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, கடந்த ஆறு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது, மணிப்பூர் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவும், திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக மாறியிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பரம ஏழைகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், ஒவ்வொரு கிராமத்திற்கும் தரமான சாலை வசதி அமைக்கப்பட்டிருப்பதுடன், வீடற்ற மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தற்கான பணிகள், ஒரு இயக்கமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேம்பட்ட வாழ்க்கை என்பது, இணைப்பு வசதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது என்றும் திரு.மோடி குறிப்பிட்டார். பாதுகாப்பான மற்றும் உறுதியான சுயசார்பு இந்தியாவை அடைய, வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். இது, கிழக்கை உற்று நோக்குங்கள் என்ற இந்தியாவின் கொள்கைக்கு உத்வேகம் அளிப்பதாக அமைவதுடன், நாட்டின் பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கு நுழைவாயிலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் சாலைகள், நெடுஞ்சாலைகள், விமான மற்றும் நீர்வழிப் போக்குவரத்து வசதிகளுடன், இணையதள வசதிகள் மற்றும் எரிவாயுக் குழாய் வசதி உள்ளிட்ட அதிநவீனக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்காக, கடந்த ஆறு ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை நான்குவழிச்சாலைகள் மூலம் இணைப்பதோடு, மாவட்டத் தலைநகரங்களுக்கு இருவழிச் சாலைகள் ஏற்படுத்தப்படும் என்றும், கிராமங்களுக்கு எத்தகைய பருவநிலையையும் எதிர்கொள்ளக்கூடிய சாலைகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தக் குறிக்கோளை அடைய, இதுவரை 3,000 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 60,000 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள ரயில்பாதைகளை அகலப் பாதைகளாக மாற்றியமைப்பதுடன், புதிய ரயில் நிலையங்களை அமைப்பதன் வாயிலாக, இம்மாநிலங்களில் ரயில் போக்குவரத்து வசதிகள் பெருமளவு முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத் தலைநகரையும் ரயில்பாதை மூலம் இணைக்கும் திட்டம், கடந்த 2 ஆண்டுகளாக அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

சாலைகள் மற்றும் ரயில்பாதைகள் தவிர, வடகிழக்கு மாநிலங்களில் விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதும் அவசியமானதாகும். வடகிழக்கு மாநிலங்களில், தற்போது 13 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்பால் விமான நிலையம் உட்பட, வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக, 3ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒரு நீர்வழித்தடம் உட்பட, 20 தேசிய நீர்வழித்தடங்கள், தடையற்ற இணைப்பு வசதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மற்றும் கலாச்சார வலிமைக்கு உதாரணமாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதியில், இதுவரை கண்டறியப்படாத ஏராளமான சுற்றுலா வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக மாற வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் தற்போது, வன்முறையைக் கைவிட்டு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். போராட்டங்கள் என்பது, மணிப்பூரில், வரலாற்றின் ஒரு பகுதியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மிசோரம் மாநில மக்கள் தற்போது வன்முறைப் பாதையைக் கைவிட்டுவிட்டதாகவும் திரு.மோடி தெரிவித்தார். ப்ரூ-ரியாங் அகதிகள் மேம்பட்ட வாழ்க்கையை நோக்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதையும், இயற்கையான பொருள்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து, அவற்றைச் சந்தைப்படுத்துவதற்காக, சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலம், தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தொழில் வளாகங்கள் மூலம், வேளாண் சார்ந்த புதிய தொழில்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளைத் தொடங்க முடியும் என்றும் அவர் கூறினார். நாட்டிற்குத் தேவைப்படும் மூங்கில் இறக்குமதி செய்யப்படுவதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய, வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஊதுபத்திகளுக்கு அதிக தேவை உள்ள நிலையில், பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஊதுபத்திகள் இன்னும் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மூங்கில் விவசாயிகள், கைவினைஞர்களுக்காக, தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இது, வடகிழக்கு மாநில இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க உதவும்.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது, சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். விளையாட்டுப் பல்கலைகழம் மற்றும் உலகத்தரம்வாய்ந்த விளையாட்டரங்கங்கள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், நாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் மாபெரும் மையமாக மணிப்பூர் மாநிலம் உருவெடுக்கும்.  

Similar News