திருகோணமலை சிவன் கோவிலை புத்தவிஹார் எனக் கூறிய சிங்கள தொல்பொருள் அதிகாரிக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு.!

திருகோணமலை சிவன் கோவிலை புத்தவிஹார் எனக் கூறிய சிங்கள தொல்பொருள் அதிகாரிக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு.!

Update: 2020-07-08 04:23 GMT

திருகோணமலை பொலனறுவை பகுதியில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் என்பது ஒரு காலத்தில் பவுத்தர்களுக்கு சொந்தமான கோகண்ண விகாரையே என்றும், பிற்காலத்தில் அது இந்து கோவிலாக மாற்றப்பட்ட இடம் என்றும் கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கு அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்த 2000 இடங்கள் உள்ளன என்றும் இவை தேசிய மரபுரிமைகளாகும் என்றும் இதை கூடிய விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

"பொலனறுவையில் உள்ள சிவன் கோயில் எம்முடையது அல்லவென்றாலும் அதை நாம் பாதுகாக்கின்றோம். கோணேச்சரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம். ஆனால் அங்குள்ள தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டாலும் கூட அவரின் கருத்து உள்நோக்கமுடைய கருத்து என்றும், அவருடைய கூற்றை சரியானது என்று எடுத்துக் கொண்டால் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்து கோவில்கள் இடிக்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படலாம் எனவும் தமிழர்கள் அச்சம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.  

இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே போர்த்துக்கீசியர் ஆட்சிக் காலத்தில் இந்த திருத்தலத்தின் மூலவர் பகுதி இடிக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுகளாக சக்தி இருந்த இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு வழி பட்டுவந்த தமிழர்கள் பிறகு கோவிலை புனரமைத்து வழி பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பழமையான இந்த கோவிலை தங்கள் பழைய விகாரை என சிங்கள அதிகாரி கூறியது இப்பகுதியில் உள்ள சிவனடியார்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.  

Similar News