உத்தர பிரதேசத்தில் எட்டு போலீசை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே: போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

உத்தர பிரதேசத்தில் எட்டு போலீசை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே: போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

Update: 2020-07-10 06:09 GMT

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. 1990களில் தொடங்கி, தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த இவர்மீது கொலை,கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கான்பூரின் மிகப்பெரிய தாதாவாக உருவெடுத்த விகாஸ் துபே, தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு உள்ளூர் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். 2001-ம் ஆண்டு பாஜக தலைவர் சந்தோஷ் சுக்லாவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேவை கைது செய்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை, கான்பூர் மாவட்டத்தின் பிக்ரு கிராமத்துக்கு 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றது. அப்போது காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைதொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே, நேற்று அதிகாலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். உஜ்ஜைனிலிருக்கும் மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு வந்தபோது, துபேவைக் கைது செய்த போலீஸார், அவரை வண்டியில் ஏற்ற முற்பட்டனர். அப்போது போலீசாரை மிரட்டும் தொனியில் பேசிய துபேவை அறைந்து இழுத்துச் சென்றனர்.

இதையடுத்து மத்தியபிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விசாரணைக்காக விகாஸ் துபேவை உத்திரபிரதேச சிறப்பு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. அப்போது விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீசார் நடத்திய என்கவுண்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Similar News