நோய்க்கு காரணம் 'காலநிலை மாற்றம்' (Climate Change)- உலகில் பதிவான முதல் கேஸ்- எங்கு தெரியுமா?
இறப்பு அல்லது கடுமையான நோயை வெப்ப அலைகள் அல்லது காற்று மாசுபாட்டுடன் அவ்வளவு எளிதில் இணைக்க முடியாது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மூச்சுத் திணறலுடன் வந்த ஒரு நோயாளியை "காலநிலை மாற்றத்தால்" (climate change) பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளார். இம்மாதிரி பதிவுசெய்யப்பட்டது இது முதல் முறையாகும்.
சமீபத்தில் கூடெனாய்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நோயாளி மூச்சுவிட சிரமப்பட்டார் என்று கனடாவின் டைம்ஸ் காலனிஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. BC Wildfire Service இணையதளத்தின்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kootenays பகுதியில் இந்த நிதியாண்டில் 1,600 காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன.
கூடனாய் லேக் மருத்துவமனையின் அவசர அறை (ER) பிரிவின் தலைவரான டாக்டர். கைல் மெரிட், மிதமிஞ்சிய வெப்ப அலையால், நீரிழிவு, இதய செயலிழப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் அதிகமான பல நிகழ்வுகளைக் கண்டார். இருப்பினும், இறப்பு அல்லது கடுமையான நோயை வெப்ப அலைகள் அல்லது காற்று மாசுபாட்டுடன் அவ்வளவு எளிதில் இணைக்க முடியாது. எனவே டாக்டர். மெரிட் அண்டை மாகாணங்களான பிரின்ஸ் ஜார்ஜ், கம்லூப்ஸ், வான்கூவர் மற்றும் விக்டோரியாவில் உள்ள மற்ற மருத்துவ நிபுணர்களை அணுகினார் என்று செய்திகள் கூறுகின்றன.
'பருவநிலை மாற்றத்தை' நோயின் காரணமாக குறிப்பிட்டதற்கு காரணம் கேட்ட போது, டாக்டர். மெரிட் "நாம் அடிப்படை காரணத்தை பார்க்காமல், அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால், மேலும் மேலும் பின்னால் செல்வோம்." என்று கூறுகிறார்.
டாக்டர். மெரிட், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அவரது நடவடிக்கை, நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையே மிகவும் நேரடியான தொடர்பை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறார்.
மேலும், கோவிட்-19 தொற்றுநோய், வெப்ப அலை, காட்டுத் தீ மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை இணைந்த மூன்று வாரங்கள் மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் மிகவும் சிரமமாக இருந்ததாகக் கூறுகிறார்.
Cover Image: Representational