புத்தாண்டில் புதிய சாதனை படைத்த இஸ்ரோ - பிரதமர் மோடி வாழ்த்து!

பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2024-01-02 04:45 GMT

நிலவையும் சூரியனையும் ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனுக்கு மனிதன் அனுப்பும் அடுத்த திட்டத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பி.எஸ்.எல்.வி , ஜி. எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளையும் தயாரித்து அதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பொறுத்தி இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது .தற்போது சூப்பர் நோவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களை தொடங்கி உள்ளது. அதன்படி நடப்பாண்டு தொடக்கத்திலேயே எக்ஸ்ரே போலாரி மீட்டர் சாட்டிலைட் என்பதன் சுருக்கமான 'எக்ஸ்போசாட்' எனும் 469 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது .


இதற்காக தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டில் மொத்தம் 12 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டன. இந்த திட்டத்துக்காக நேற்று முன்தினம் காலை 8 .10 மணிக்கு தொடங்கிய 25 மணிநேர கவுண்டனையை முடித்துக்கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவு தளத்திலிருந்து பி.எஸ் எல்.வி.சி 58 ராக்கெட் நேற்று காலை 9 .10 மணிக்கு தீ பிழம்பை கக்கியபடி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


ராக்கெட் புறப்பட்ட 21 நிமிடங்களில் முதன்மை செயற்கைக்கோளை பூமியில் இருந்து 650 km உயரத்தில் திட்டமிட்ட புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. பூமியின் மேற்பரப்பில் உள்ள புற ஊதாக்கதர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்வதற்காக கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த 'வெசாட் ' என்ற செயற்கைக்கோளும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இருந்தது .


இந்த செயற்கைகோளும் திட்டமிட்ட இலக்கில் விண்ணில் நிலைநிறுத்ப்பட்டு உள்ளது.பெண்கள் மேற்பார்வையில் உருவான முதல் செயற்கைக்கோள் என்ற பெருமையை இந்த செயற்கைக்கோள் பெற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'நமது விஞ்ஞானிகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட இந்த நிகழ்வு விண்வெளி துறைக்கு ஒரு அற்புதமான செய்தியாகும். இது விண்வெளி துறையில் இந்தியாவின் திறமையை மேலும் மேம்படுத்தும். இந்தியாவை முன்னோடி இல்லாத உயரத்திற்கு எடுத்துச் செல்லும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News