வங்கிக்கு திரும்பாத 2000 ரூபாய் நோட்டுகள் எத்தனை கோடி தெரியுமா ? - ரிசர்வ் வங்கி தகவல்!

ரூபாய் 9, 760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-03 07:15 GMT

கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு இடையே கடந்த மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பின்னர் இந்த காலக்கெடு அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நீண்ட வரிசையில் இன்று 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி  ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-

வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட மே 19- ஆம் தேதி நிலவரப்படி ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தற்போது 9,760 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மீதி 97.26 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லும். இன்னும் அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு அவற்றை அனுப்பி வங்கி கணக்கில் சேர்க்க சொல்லலாம் அல்லது நேரிலும் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SOURCE :DAILY THANTHI

Similar News