பெண்கள் அதிகாரம் பெற பொருளாதார தற்சார்பு அவசியம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

பெண்கள் அதிகாரம் பெற பொருளாதார சுய சார்பு அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

Update: 2022-11-17 14:00 GMT

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பெண்கள் சுய உதவி குழுக்கள் மாநாடு நடந்தது. அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பெண்கள் சுய உதவி குழுக்களை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்கியது பாராட்டத்தக்கது. மத்திய பிரதேசத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.இவற்றில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் நாட்டையும் வலுப்படுத்தும்.


இந்தியா வளர்ந்த நாடாக ஆவதற்கு பெண்களின் அதிகபட்ச பங்களிப்பு அவசியம். பெண்கள் அதிகாரம் பெற அவர்கள் பொருளாதார சுய சார்புடன் இருப்பதுதான் சிறந்த வழி. பெண்கள் சுய சார்புடன் திகழ சுய உதவிக் குழுக்கள் வழி வகுக்கும். பெண்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றி  இருந்தும் தங்கள் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.


பெண்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதுடன் அவர்களை கவுரவமாக நடத்துவது நமது தேசிய கடமை. ஒரு காலத்தில் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டியாக இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடைய அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





 


Similar News