கோவில் நிதியில் தேர் சீரமைத்ததாக பல லட்சம் சுருட்டிய அறநிலையத் துறை அலுவலர் சஸ்பெண்ட் !
கோவில் தேர் செய்வதற்காக பொதுமக்கள் வழங்கிய நிதியை அறநிலையத்துறை நிதி என கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டிய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட அதைச் சுற்றியுள்ள 12 கோவில்களின் செயல் அலுவலராக கலைவாணி என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருத்தேர் சிதிலமடைந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து சீரமைக்கப்பட்டது.
ஆனால் செயல் அலுவலர் கலைவாணியோ இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கிய கோவில் நிதியை பயன்படுத்தி தேரை சீரமைத்ததாக கணக்குக் காட்டி பல லட்சங்களை சுருட்டியதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதே போன்று அவரது கட்டுப்பாட்டில் இருந்த 12 கோவில்களின் வரவு செலவு கணக்குகளிலும் முறைகேடு செய்ததாக அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு செயல் அலுவலர் கலைவாணி முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கலைவாணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், "ப.வேலூர் தாலுகாவில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம் உள்ளிட்ட, 12 கோவில்களின் செயல் அலுவலராக கலைவாணி பணியாற்றினார். அவர் மீது முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கோவில் வரவு, செலவு கணக்கில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாத விடுப்பில் இருந்து வரும், கலைவாணி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு கூறியதாக குறிப்பிட்டுள்ளது.