கன்னியாகுமரியில் ஜெபம் செய்வதாக கூறி மாணவியை கடத்திய போலி மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கறம்பவிளைப் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி அத்தொழிலாளியின் வீட்டிற்கு சென்று வருவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதற்கிடையில் தொழிலாளியின் மூன்றாவது மகளுக்கு உடல் நலம் குறைந்துள்ளது. இதனை அறிந்த செந்தில்குமார் தனக்கு ஜெபம் செய்யத் தெரியும் என்றும் ஜெபம் செய்தால் உடல்நிலை சரியாகிவிடும் என்ற மூட நம்பிக்கை அளித்தும் அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு தொழிலாளியின் இரண்டாவது மகளை காணவில்லை. மகள் தொலைந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அவளது தந்தை புகார் தெரிவித்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாரையும் அந்த மாணவியையும் காவல்துறையினர் தேடி அலைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா என்ற பகுதியில் குற்றவாளியான செந்தில்குமார் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவரை பிடிப்பதற்காக செந்தில்குமாரின் மனைவியின் உதவியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைக்க முயற்சி செய்தனர். பின் திருவனந்தபுரத்திற்கு வருவதாக கூறியுள்ளார் செந்தில்குமார்.
அங்கு தன்னுடன் அந்த மாணவியையும் அழைத்து வந்துள்ளார். இவரை பிடிப்பதற்காக அப்பகுதியில் மறைந்திருந்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். காப்பாற்றப்பட்ட மாணவியை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு செந்தில்குமாரை நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். நான்கு மாதங்களுக்குப் பின் அந்த மாணவியை மீட்டெடுத்தும், ஜெபம் செய்வதாக கூறி மாணவியை கடத்திச் சென்ற போலி மத போதகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:Tamil samayam
https://tamil.samayam.com/latest-news/kanyakumari/fake-pastor-arrested-who-kidnapped-school-student-near-nagercoil-in-kanyakumari/articleshow/93125989.cms