உலக அரசியலில் பரபரப்பு: இங்கிலாந்து, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒரே நாளில் 'இந்தியா' வருகை!
ரஷ்யா மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒரே நாளில் இந்தியாவுக்கு வர இருப்பது உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகிறது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனிடையே மேற்கத்திய நாடுகளும், ஆசிய நாடுகளும், வளைகுடா நாடுகளும் போரில் தங்களது நிலைப்பாடுகளை மிகவும் கவனமாக கையாண்டு வருவதை பார்க்க முடிகிறது.
அதே சமயம் இந்தியா எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போரில் இந்தியாவை எப்படியும் தங்களது பக்கம் இழுத்து விட வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யாவும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் ஐநா சபையில் உக்ரைன் போர் பற்றி நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் இருந்தது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் ட்ரூஸ் நாளை (மார்ச் 31) இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உக்ரைன் போர் குறித்து ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது. அதே வேளையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் நாளை (மார்ச் 31) இந்தியா வர உள்ளார். அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச இருக்கிறார். அவரும் உக்ரைன் பற்றி பேச இருக்கிறார். ஒரே நாளில் இரண்டு நாட்டு அமைச்சர்கள் இந்தியாவை நோக்கி வருவது உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: The Indian Express