பாஜக ஆட்சி அமைந்தால் வளர்ச்சியின் சிறப்பு உச்சத்தை தொடும்-ஆந்திராவில் பிரதமர் மோடி!
பாஜக ஆட்சி அமைந்தால் ஆந்திராவில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.;
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி நன்கு அமையும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிப்பேட்டாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி தெலுங்கில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். பாஜகவில் பல கட்சிகள் இணைவதால் நாம் கண்டிப்பாக 400 என்ற இலக்கை கடக்க வேண்டும். பாஜக அரசு மக்களின் அரசு. சேவை மனப்பான்மையுடன் பாஜக செயல் பட்டு வருகிறது. ஏழைகள் குறித்து ஆலோசிக்கும் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டு உள்ளது. எங்களுக்கு வாக்களித்து தற்போதைய ஜெகன் அரசு மீதுள்ள கோபத்தை மக்கள் தீர்த்துக் கொள்ளலாம்.
ஆந்திராவை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றுவது எங்கள் லட்சியம். பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளையும் நாம் ஒரு குடியின் கீழ் அரவணைத்துக் கொண்டு செல்வோம். ஆனால் மற்றவர்கள் சுயநலமாக கூட்டணி அமைத்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் கூட்டணி வைத்துள்ளது .ஸ்ரீ ராமருக்கு நாம் அயோதியில் கோயில் எழுப்பி உள்ளோம். ஸ்ரீ ராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் என்றால் நம் கண் முன் நிற்பவர் என்.டி ராமராவ் அவர் தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர். ஆனால் அப்போது இருந்த காங்கிரசார் அவருக்கு எவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்தினர் என்பது மக்களுக்கு தெரியும்.