இனி பாலில் கலப்படமா... நோ சான்ஸ்: IIT மெட்ராஸ் அசத்தல் கண்டுபிடிப்பு?

IIT மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளில் கண்டறியக்கூடிய குறைந்த செலவிலான கருவியை உருவாக்கி உள்ளனர்.

Update: 2023-03-28 09:47 GMT

சென்னையில்  உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3D) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும். யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம்.


பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு உள்ள இந்தக் கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் ஏதேனும் உள்ளதா எனப் பரிசோதனை செய்ய முடியும். எந்தவொரு திரவத்திலும் கலப்படத்தை சோதிக்க ஒரேயொரு மில்லி லிட்டர் மாதிரியே போதுமானது.


இக்கருவியின் செயல்பாட்டை விவரித்த ஐ.ஐ.டி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறும்போது, "3D காகித அடிப்படையிலான இந்த நுண்திரவக் கருவி (microfluidic device) மேல் மற்றும் கீழ் உறைகளையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும். இந்த வடிவமைப்பில் 4 கிரேடு வாட்மேன் ஃபில்டர் பேப்பர் பயன்படுத்தப் படுவதால், திரவ ஓட்டத்திற்கு உதவுவதுடன், ரீஏஜெண்ட்களை அதிகளவில் சேமித்துக் கொள்ள வைக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News